இந்திய அணியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பாரா டோனி?

431

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது என்று டோனி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஒருநாள் போட்டிகள் ஹராரேயில் வருகிற 11, 13, 15 ஆகிய திகதிகளிலும், 20 ஓவர் போட்டி அதே மைதானத்தில் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் நடக்கிறது.

சிம்பாவே போட்டி தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அணியில் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இருந்து நேற்று சிம்பாவே புறப்பட்டது. முன்னதாக தலைவர் டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..

இந்த போட்டி தொடர் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏறக்குறைய ஒரே பிரிவு வீரர்களுடன் நான் விளையாடி வந்து இருக்கிறேன். இந்த போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுடன் தற்போது தான் முதல்முறையாக இணைந்து விளையாட உள்ளேன்.

எனவே வீரர்களின் பலம், பலவீனத்தை விரைவில் ஆராய்ந்து அதற்கு தகுந்த படி அணியில் வீரர்களை இடம் பிடிக்க செய்ய வேண்டியது அவசியமானதாகும். முடிந்த அளவுக்கு சரியான இடத்தில் உரிய நபர்களை பயன்படுத்த வேண்டும். அணியின் ஒருங்கிணைப்பு நேர்த்தியாக அமைந்தால் அணி நன்றாக இருக்கும்.

சிம்பாவேயில் பகல் போட்டியில் நாணயசுழற்சி முக்கிய பங்கு வகிக்கும். சூழ்நிலைக்கு தகுந்த படி நமது அணுகுமுறையை மாற்றி, அதற்கு தகுந்தபடி செயல்படுவது கூடுதல் பலமாக அமையும்.

சர்வதேச போட்டியில் விளையாடுவது என்பது சிறிது வித்தியாசமானதாகும். இந்திய அணிக்காக விளையாடுகையில் வித்தியாசமான நெருக்கடி இருக்க தான் செய்யும். அத்துடன் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி நன்றாக உள்ளது.

எனது வருங்காலம் குறித்து கேட்கிறீர்கள். நான் எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். தலைவர் பதவியில் தொடர்வது குறித்து இந்திய கிரிக்கெட் சபைதான் முடிவு செய்ய முடியும். இந்த விடயத்தில் நான் முடிவு செய்ய முடியாது.

இந்திய அணியின் பயிற்சியாளராக சிறந்த நபரை நியமிக்க வேண்டும். அவர் நமது கலாசாரத்தை நன்கு புரிந்தவராக இருக்க வேண்டும். இந்தி பேச தெரிந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. ஆங்கிலத்தில் வீரர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தலைவர் டோனி கூறினார்.