இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளும் கதவுகளே இல்லாமல் 300 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. ஆனாலும், அங்கு எந்தவித திருட்டு பயமும் இல்லை. சனிபகவானே பாதுகாப்பு என நம்புகின்றனர்.
வீடு என்றாலே கதவு பாதுகாப்பு அவசியம் என கருதும் நம்மால் இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், சனி சிங்னாபூர் கிராமத்தினரின் நிஜமான நடைமுறை இதுதான்.
அந்த கிராம மக்கள் அனைவரும் சனி கடவுளை வணங்குகின்றனர். அந்த கடவுளின் மீது உள்ள பக்தியின் அதீத நம்பிக்கையால் இப்படிச் செய்கின்றனர். அதற்கு வியப்பான ஆரம்பமும் உண்டு.
வழக்கம் வந்த அதிசயம்
300 ஆண்டுகளுக்கு முன் கடும் மழையினால் பனாஸ்னாலா ஆற்றில் பெரும்வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் கனமான பலகை போன்ற 1.5 மீ. நீளமுள்ள கரியபாறை மிதந்து வந்தது.
அது சிங்னாபூர் கிராமத்தின் அருகே வரும்போது, கரை ஒதுங்கியது. அதை வினோதமான பொருளாக கண்ட சிலர் குச்சியால் குத்திப்பார்த்தனர். அதிலிருந்து ரத்தம் வழிந்தது. மக்கள் வியந்தனர்.
அன்று இரவு கிராம தலைவரின் கனவில் சனி கடவுள் தோன்றினார், கரை ஒதுங்கியது எனது சிலைதான். அது மகத்தான சக்தி படைத்தது.
அதை இந்த கிராமத்திலே வைத்து வழிபடுங்கள். அது உங்கள் எல்லோரையும் காப்பாற்றும். கிராமத்தினர் வீடுகளிலும் கதவுகள் வேண்டாம். அப்போது தான் தடையில்லாமல் நான் வந்து அருள் செய்ய முடியும். அனைத்துக்கும் நானே பாதுகாப்பு என்று உறுதியளித்து கிராம தலைவரை ஆசிர்வதித்து மறைந்தார்.






