
கனடா நாட்டில் ஓநாயிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் தவித்த பெண் ஒருவரை கரடி காப்பாற்றியுள்ளது.வடமேற்கு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள Hay River என்ற சிறிய நகரில் Joanne Barnaby என்ற பெண் வசித்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சமைப்பதற்காக காளான்களை பறிக்க தனது வளர்ப்பு நாயுடன் புறப்பட்டுள்ளார்.
சாலையில் காரை நிறுத்திவிட்டு அவர் காளான்களை பறித்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது, அவருக்கு அருகில் விலங்கு ஒன்றின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது காருக்கு அருகில் ஓநாய் ஒன்று நின்றுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது தனது முதலாளியை காப்பாற்ற வளர்ப்பு நாய் ஓநாயை நோக்கி பலமாக குரைத்துள்ளது. ஆனால், ஓநாய் அசராமல் அங்கேயே நின்றுள்ளது.ஓநாய் நகர்ந்தால் தான் காரை எடுக்க முடியும் என்பதால் பெண் அச்சத்தில் உறைந்து நின்றுள்ளார்.
ஆனால், ஓநாய் பெண்ணை நோக்கி முன்னேறியுள்ளது. அப்போது வேறு வழியின்றி ஓநாயிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த அடர்ந்த வனத்திற்குள் நுழந்துள்ளார்.ஓநாயும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. அச்சத்தில் செய்வதறியாமல் குழம்பியிருந்த அவர் கடவுளின் பெயரை உச்சரித்தவாறு வேகமாக நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென ஒரு தாய் கரடியின் சத்தம் கேட்டுள்ளது. தூரத்தில் குட்டி கரடி ஒன்று இருந்ததால் அதனை அழைப்பதற்காக தாய் கரடி ஒலி எழுப்பியுள்ளது.இது தான் சரியான தருணம் என எண்ணிய அந்த பெண் குட்டி கரடியை நோக்கி சென்றுள்ளார். அப்போதும், அந்த ஓநாய் அவரை துரத்தி வந்துள்ளது.
குட்டி கரடிக்கு அருகில் சென்றதும் வேறொரு பாதையை எடுத்து தப்பிக்க முயன்றுள்ளார். குட்டி கரடிக்கு அருகில் ஓநாய் செல்வதை பார்த்த தாய் கரடி பாய்ந்து வந்து ஓநாயை தாக்கியுள்ளது.இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பெண் சாலையை நோக்கி வேகமாக நடந்து சென்றுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக வழி தவறி வேறு திசையில் சென்றுவிடுகிறார்.
சுமார் 18 மணி நேரம் வனத்தில் சுற்றி திரிந்த அந்த பெண்ணும் வளர்ப்பும் நாயும் பத்திரமாக சாலையை அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தபோது, அதிகாலை நேரத்தில் ஓநாயிடம் சிக்கியபோது பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தேன்.
என்னுடைய நாயும் ஓநாயை பார்த்து அச்சப்பட்டு அதனை எதிர்த்து தாக்கவில்லை. வேறுவழியின்றி உயிர் பிழைக்க வனத்தில் நுழைந்துவிட்டேன்.அதிர்ஷ்டவசமாக கரடியிடம் ஓநாயை சிக்க வைத்ததால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிந்தது. இந்த சம்பவத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என உருக்கத்துடன் அவர் பேசியுள்ளார்.





