மாதவனுக்கு நீதிமன்றம் அழைப்பு!!

425

Madhavan

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

கொடைக்கானல் அடிவாரத்தில் இருந்து பாலாறு அணை வரை கால்வாய் செல்கிறது. பாலசமுத்திரம், அய்யம்புலி ஆகிய கிராமங்களை ஒட்டி இந்த கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை நம்பி இந்த 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

பாலசமுத்திரம் கால்வாயை ஒட்டி உள்ள 4 ஏக்கர் 88 சென்டு நிலத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜம்மாள் என்பவரிடம் இருந்து நடிகர் மாதவன் விலைக்கு வாங்கி உள்ளார்.

இதன்பின்பு, நடிகர் மாதவன் கால்வாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அங்கு மின் கம்பம் அமைத்துள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் தென்னை மற்றும் கொய்யா மரங்களை வைத்துள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார் ஆகியோருக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்று புகார் மனு கொடுத்ததை அறிந்த நடிகர் மாதவனின் ஆட்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள் வடிவேல்சேகர் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் கலெக்டர், பழனி மின்வாரிய செயற்பொறியாளர், பழனி தாசில்தார், நடிகர் மாதவன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.