சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் பொலிஸ் தரப்பு தடுமாறி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் கொலையாளி அவர்தானா என்பதை உறுதியாக பொலிசாரால் கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
சுவாதியின் உடலின் அருகே இருந்து மீட்டெடுத்த கைப்பையில் பணம் உள்ளிட்ட அனைத்தும் அதேபடி உள்ளதாகவும், ஆனால் அவரது கைப்பேசி மாயமாகியுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
அந்த கைப்பேசியை கொலை செய்த நபர் எடுத்துச் சென்றாரா அல்லது என்னவானது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் சுவாதி டக்சியில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கார் டிரைவர் கூடுதல் கட்டணம் கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், உடனடியாக சுவாதி அந்த நிறுவனத்தில் புகார் செய்யவே ஓட்டுநரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த டிரைவரையும் பிடித்து ரயில்வே பொலிசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் தான் கொலை செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.
சுவாதியை தாக்க பயன்படுத்திய கத்தியை ரயில்பாதையில் இருந்து பொலிசார் கைப்பற்றி தடய அறிவியல் ஆய்வு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே பொலிசின் ஜாக் என்ற மோப்ப நாயும், மாநகர காவல்துறையின் அலெக்ஸ் என்ற மோப்ப நாயும், ரயில்நிலையத்தில் இருந்து புஷ்பா நகர் நெல்சன் மாணிக்கம் சாலை வரை ஓடி நின்றுவிட்டன.
கொலை நடந்த நடைமேடையில் மட்டுமல்ல, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் முழுவதும் கண்காணிப்பு கமரா பொருத்தப்படவில்லை. அதனால் கொலைச் சம்பவம் குறித்தும், கொலையாளி குறித்தும் உடனடியாக தெரிந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.






