
திருச்சியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வீடியோ எடுக்கவில்லை, ஆடம்பரமாக ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற காரணத்தை கூறி, பெண்வீட்டார் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேவதி, செந்தில் ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று திருமணம் நடக்கவிருந்தது. அப்போது புரோகிதர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்கையில், திடீரென கோபம் அடைந்த மணமகள் வீட்டார், திருமணத்தில் வீடியோ எடுக்கவில்லை, ஒழுங்கான மண்டபமும் இல்லை என கூறி திருமணத்தை நிறுத்த கூறியுள்ளனர்.
மேலும் மேடையில் இருந்த குத்துவிளக்கு மற்றும் தாம்பாள தட்டுகளை தூக்கி எறிந்துள்ளனர்.எங்கள் வீட்டின் சார்பாக பெரிய ஆட்கள் வருவார்கள், எனவே நன்றாக வீடியோ எடுக்க வேண்டும் என கூறியிருந்தும், வீடியோவுக்கு ஏற்பாடு செய்யவில்லை என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். மணமேடையை விட்டு மணமகளை எழுந்து வருமாறு கூறியுள்ளனர், ஆனால் மணமகள் மறுத்துவிடவே, மணமகளை குண்டு கட்டாக தூக்கிகொண்டு வெளியேறியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட கலவரத்தில் மணமகள் மயங்கிவிடவே, அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர், இந்த சம்பவம் தொடர்பாக மணமகன் வீட்டார் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் இருவீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் மணமகள் வீட்டார் விடாப்பிடியாக இருக்கவே இந்த திருமணம் நின்றுள்ளது.





