
மத்திய பிரதேசத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என்ற ஆத்திரத்தில் அனுமன் கோவிலில் இருந்த சிலையை உடைத்த கணவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். இது குறித்து நகர பொலிஸ் தலைவர் ஷஷிகாந்த் கங்கானே கூறும்பொழுது, பல்டா பகுதியில் பழமையான கேதாபதி அனுமன் கோவில் உள்ளது. இங்கு உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக மனோஜ் பஞ்சாரா (37) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பஞ்சாராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை வீட்டிற்கு திரும்ப அழைத்து வர பஞ்சாரா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அதன்பின் அனுமன் கோவிலில் சென்று அவர் வேண்டியுள்ளார். அவரது அனைத்து வேண்டுதல்களுக்கு பின்னரும் மனைவி திரும்பி வராத ஆத்திரத்தில் நேற்றிரவு அனுமன் சிலையை உடைத்துள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மனோஜ் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தினை அடுத்து அந்த கோவிலை சுற்றி சில வலது சாரி அமைப்புகள், இந்த விவகாரத்தில் பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து கோவிலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





