
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில்26.06.2016 ஞாயிற்றுகிழமை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணியை எதிர்த்து யாழ்சாவகச்சேரி இந்துக்கல்லூரி பெண்கள் அணி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எல்லே விதிமுறைக்கு மாறாக நடுவர்கள் அளித்த தீர்ப்பினால் வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணி துரதிஸ்டவசமாக கால் இறுதிப போட்டியில் இருந்து வெளியேறியது.
அதன் போது இலங்கை எல்லே நடுவர்களுக்கான சங்கத்தின் செயலாளர் S.A.Gவிஜேரட்ண அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விதி உறுதிப்படுத்தப்பட்டும் குறித்த இடத்தில் நடுவர்களால் சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை.
துடுப்பாட்ட வீரரின் விலகலுக்கு பின்னர் பந்து வீசுபவர் மாறுதல் என்ற விதி (எல்லே விளையாட்டு வழிகாட்டி நூலாசிரியர் விமலசிறி சில்வா பக்கம் -11) நடுவருக்கு தெரியாத காரணத்தினாலேயே இவ்வணி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக இலங்கை எல்லே சம்மேளன விதியின்படி,
• போட்டி விதி மீறல் இடம் பெற்ற இடத்தில் இருந்து மீளவும் தொடர்ந்து நடாத்தப்படவேண்டும் .
• அல்லது போட்டி மீளவும் நடாத்தப்பட வேண்டும்.
இவ் விளையாட்டு விதியை கருத்திற் கொள்ளாது தமது குழுத் தீர்மானப்படி வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய பெண்கள் அணியை போட்டியில் இருந்து வெளியேற்றியது அப்பட்டமான அவர்களின் தவறை எடுத்துக்காட்டுகின்றது.
இவ்விதி மீறல் இடம் பெற்ற வேளையில் வடமாகாண எல்லே போட்டி இணைப்பாளரிடம் மேன் முறையீடு 26.06.2016 அன்று பி.ப 4.45 மணியளவில் வழங்கப்பட்டது. அம்முறைப்பாட்டிற்குரிய முடிவினை 27.06.2016அன்று காலை 8 மணிக்கு வழங்கப்படுவதாக வடமாகாண எல்லே போட்டிக்கு பொறுப்பானவர் கூறினார்.ஆனாலும் அன்று காலை 10.45 மணிவரை எந்த முடிவும் வழங்கப்படாத நிலையில் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதாக கூறி இவ்வணி அனுப்பி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமத்தின் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களாகிய இவ்வணியினர் வடமாகாண விளையாட்டுகுழுவினரின்அசமந்தப்போக்கினால்பலஅசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் ஒரு நாள் பொழுதை வீணாக மைதானத்தில் கழித்து தமது பிரதேசத்தைச் சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கல்வித்திணைக்களத்தின் விளையாட்டுத் துறையின் பொறுப்பற்ற இச் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒரு விளையாட்டுக்கான தகுதியான நடுவரைக் கொண்டு போட்டியை நடாத்த முடியாதவர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு எவ்விதம் உதவுவார்களென கல்விச் சமூகத்தினர் ஆதங்கப்படுகின்றனர்.





