பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

639

sivanathan   ch

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சம்பியன் ஒப் சேஞ்ச்’ (Champion of Change) விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவா சுட்டுக் கொலை செய்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.

நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது. இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சம்பியன் ஒப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம் அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர். பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி போர்க் கூறுகையில் பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

அமெரிக்காவின் ஒரு உயரிய விருது ஈழத் தமிழருக்கு கிடைத்ததையிட்டு நாமும் பெருமைகொள்வோம்.