இலங்கை அரசாங்கத்தின் உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். இந்தத் தகவலை மத்துகம பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் தென்பகுதி கரையோரப் பிரதேசமான களுத்துறை மாவட்டத்தின் மதுகம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இவர் இன்று வியாழக்கிழமை காலை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
மத்துகம மீகாதென்ன ஆரம்ப பாடசாலை நிர்வாகம் தரம் ஒன்றுக்கு விண்ணப்பித்தவர்களில் 10 பேரை சேர்த்துக்கொள்ள மறுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும நேற்று முன்தினம் மாலை மத்துகம வலையக் கல்விப் பணிமனைக்கு எதிரில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
எனினும் இரண்டு நாள் கடந்தும் பாடசாலை நிர்வாகமோ வலயக் கல்விப் பணிமனையோ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சிறுவர்கள் பத்து பேரையும் இணைத்துக்கொள்ள மறுத்ததை அடுத்து குறித்த பாடசாலைக்குள் புகுந்த பிரதியமைச்சர் அங்கிருந்த மின்விசிறியில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த பொலிசாரும் அவரது ஆதரவாளர்களும் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பத்து சிறுவர்களையும் இணைத்துக்கொள்ள மீகாதென்ன ஆரம்ப பாடசாலை அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.






