வீட்டில் கழிப்பறை கட்டினால் 4 கபாலி டிக்கெட் இலவசம் என்ற புதுவித முயற்சியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் உள்ள செல்லிபட்டு கிராமத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இரு நாட்கள் ஆய்வு செய்தோம்.
அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லாதது அறிந்தோம். அதையடுத்து வீடுகளில் கழிவறை அவசியம் என்பதை வலியுறுத்தினோம்.
வீடுகளில் கழிவறை கட்ட அரசு 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம். மேலும், கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க புதிய முயற்சியை எடுத்தோம்.
மக்கள் தாமாகவே முன்வந்து யூலை 15க்குள் கழிவறை கட்டுவதை உறுதி செய்ய விரும்பினோம். அவ்வாறு கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினி நடித்த கபாலி படத்தின் 4 டிக்கெட்டுகள் தர முடிவு எடுத்துள்ளோம்.
திரையரங்குகளுடன் பேசி இதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்வோம் என்று கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவு குறித்து ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கழிவறை கட்டுவோருக்கு இலவச திரைப்பட டிக்கெட் தர உள்ளது நல்ல பலன் தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.






