வவுனியா பொருளாதார மத்திய நிலைய சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன? ஓர் அலசல்!!

280


Thandikulam

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும்.


வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு மிக அண்மையாகவுள்ள தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டுமா? அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஓமந்தையில் A9 வீதிக்கு அண்மையாக அமைய வேண்டுமா? என்ற இட அமைவு பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் அது பற்றிய வாதப் பிரதி வாதங்கள் மற்றும் ஏட்டிக்குப் போட்டியான உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

பல்வேறு இழுபறிகள் மத்தியில் வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானப்படி தாண்டிக்குளத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக அறியமுடிந்துள்ள போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பாக பொதுவாகவும் வவுனியாவின் அமைவிடம் பற்றிய கருத்துக்கள் சில பொது மக்களதும் அது சார்ந்த அமைப்புக்களதும் கவனத்திற்காகவும் சிந்தனைக்காகவும் சமர்ப்பிக்கப்படுகிறது.

இணையத்தள தகவல்களின் படி இலங்கையில் 15 பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடிந்துள்ளது. அவை அனைத்தும் 4 தொகுதிகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.


மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 04, உற்பத்திப் பிரதேசங்களை மையமாகக் கொண்டவை 08, சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 01, அமைக்க உத்தேசிக்கப்பட்டவை 01 என அவற்றை இனங்காண முடிந்துள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது எந்த வகையைச் சார்ந்தது என்பது தெளிவுபடுத்தப்படுத்தப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.


வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தும் வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையமே வடக்கின் முதலாவது பொருளாதார மத்திய நிலையமாகும்.

அமைவிடம் தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதற்கு முன் அரசியல் சார்ந்த விடங்களுக்கு அன்றி நீண்ட காலத்திற்கு மக்களுக்கும் மாவட்டத்திற்கும் பயன்தரக் கூடிய பொருளாதார சமூகக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா நகரில் இருந்து 2 கி.மீற்றர் தூரமுள்ள அண்மையான இடத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற கிராமிய பொருளாதார அமைச்சரின் விட்டுக் கொடுப்பற்ற கூற்றுக்கள் எமது மாவட்டத்திற்கு ஏற்புடையதல்ல.

குறித்த தூரத்திற்குள் அமைக்கப்படாவிட்டால் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படும் என்ற அமைச்சரின் விடாப்பிடி எப்படி நடைமுறைக்குச் சாத்திமாகும் என்பதைச் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

அதியுச்ச அதிகாரங்களை கொண்டதும் மக்களது ஆணையைப் பெற்றதுமான மக்களவையில் வரவு செலவுத்திட்டப் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்டு பல குழு நிலைகளையும் கடந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான யோசனையை நல்லாட்சி அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சரினால் எவ்வாறு வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும்?

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளுக்கும் அப்பால் ஓமந்தையில் அமைப்பதற்கான ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல், வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆகையால் ஓமந்தையில் A9 வீதிக்கண்மையாக அமைவதில் அல்லது அமைக்கப்படுவதில் போக்குவரத்து வசதி வாய்ப்புக்கள் தொழில் நுணுக்கங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் தவறானதாக இருக்க முடியாது.

வவுனியா நகரை மட்டுமன்றி அதனை அண்டிய பிரதேசங்களின் அபிவிருத்தியை அல்லது அவற்றின் நகராக்கம் சார்ந்த நகர்வில் ஊன்றிக் கவனத்தில் கொள்வது பொது நலன் சார்ந்நதவர்களின் பணியாக இருந்திருக்க வேண்டும்.

ஓமந்தையில் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியின் ஒரு பிரிவாக உயர் தொழில் நுட்பக் கல்லூரி செயல்படத் தொடங்கியுள்ளது. தேசிய அல்லது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை அண்டி அரச ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு துரித விருத்தி கண்டு வருகின்றது.

இத்தகைய பின்னணியில் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திற்கு மாற்றுவது அல்லது மாற்ற எத்தனிப்பது ஓமந்தையின் நகராக்கத்தை அதன் அபிவிருத்தியை மறுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

தாண்டிக்குளத்தில் அமைக்கப்படுவதால் அதிக நன்மை பெறப்போகின்றவர்கள் யார்? தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற விவசாயிகளா? அல்லது தமது பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வர்த்தகம் புரியும் வர்த்தகர்களா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உரியது.

வவுனியா மாவட்டத்தின் சனத்தொகையில் 80% க்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான தொழில் விவசாயம். விவசாய உற்பத்திகள் அனைத்திற்கும் உரிய பிரதேசங்கள் இவை.

எனவே கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின்; சந்தைப்படுத்தலை இலகுபடுத்த வேண்டுமானால் பொருளாதார மத்திய நிலையம் கிராமப்புறம் சார்ந்த இடத்தில் அமைப்பதற்கான சாதக நிலைகளே அதிகமாக இருக்கின்றன.

வவுனியா மாவட்டத்தில் சுமார் 201க்கும் மேற்பட்ட கமக்காரர் அமைப்புக்கள் காணப்படுகின்றன.16329 இக்கும் மேற்பட்டோர் இதன் அங்கத்தவர்களாவர். இவ்வமைப்புக்களில் மிக அதிகமானவை கிராமங்கள் சார்ந்தவை.

ஓமந்தை, கனகராயன்குளம், நெடுங்கேணி, புளியங்குளம் போன்ற இடங்களில் அதிகமான கமக்காரர் அமைப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே அமைவிடத்தைத் தீர்மானிப்பதில் இவ்வமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டனவா? அவர்களின் கருத்துக்கள் விருப்பங்கள் அறியப்பட்டனவா? என்பதில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன.

தாண்டிக்குளம் விவசாயப் பண்ணைக்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையம் அமையும் போது ஏற்படும் சுழல் பாதிப்பகளின் ஊடாக நல்லின விதை உற்பத்திகளைப் பாதிக்கும் என்ற விடயத்தைப் புறந்தள்ளிவிட முடியாதுள்ளது.

மற்றொரு வகையில் விவசாயப் பண்ணையை வேறிடத்திற்கு மாற்றுவதாக முடிவு எடுக்கப்பட்டால் அதன் மூலம் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

பல்லாண்டு கால விவசாயப் பாரம்பரியம் கொண்ட பண்ணையை புதிதாக அமைப்பதற்காக அதிக பணத்தை முதலீட்டுகளுக்கு செலவிட நேரிடும். விதை உற்பத்தியில் புதியபண்ணை செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் விவசாயத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பதுடன் அருகாமையில் உள்ள விவசாயக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் தமது செயன்முறைக் கல்வியை கற்பதில் இடர்பாடுகளை எதிர் நோக்குவர்.

புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் போது வவுனியா நகரின் சன, வாகன நெரிசல் தாண்டிக்குளம் வரை விரிவடைந்து அசௌகரியங்களையும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும்.

யுத்தக் காலங்களில் ராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு பல்வேறு வேலைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட பெருமளவு நிதி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான வவுனியா நகரை அண்டியுள்ள பல இடங்களுக்கு மாற்றப்பட்டு செலவிடப்பட்டமை கடந்த கால வரலாறாகவுள்ள நிலையில் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த ஏனைய கிராமியப் பிரதேசங்களின் விருத்தியில் இப்படியான சந்தர்பங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அனைவரதும் பாரிய பொறுப்பாகும்.

-எம்.பாலசிங்கம்-