வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

718

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம் சேர்ந்த 9 படகுகளை பிடித்து கொண்டு, 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க அவசர கூட்டம் நடந்தது. இதில், நேற்று மீன்பிடிக்க சென்ற 49 மீனவர்களையும், 9 படகுகளையும், ஜூன் 20ம் திகதிக்குள் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஜூன் 22ம் திகதி, அனைத்து விசைப்படகிலும் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கை அரசிடம் தஞ்சம் கேட்டு மீனவர்கள் இலங்கை நோக்கி செல்வது, மேலும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில், காலையில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, ஜூன் 8ம் திகதி முதல் பகல் 2 மணியளவில், மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று, மீன்பிடிக்க செல்ல வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.