இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…

463

IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தலைவர் டிவிலியர்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டி அரங்கில் தனது 14வது அரைசதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 127 ஓடங்கள் சேர்த்த போது ரோகித் ஷர்மா 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மிகச் சிறப்பாக ஆடிய தவான், கிளைன்வெல்ட் பந்தில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 94 பந்துகளில்(12 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம்) 114 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜடேஜா ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட்ட இழப்புக்கு 331 ஓட்டங்களை குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மெக்லாரன் 3 விக்கட்டுகளையும், டிசாட்சொபே 2 விக்கட்டுகளையும், டுமினி ஒரு விக்கட்டையும் பெற்றுக்கொண்டனர் .

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியில் கோலின் இங்ராம் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹசிம் அம்லா 22 ஓட்டங்களுடனும் டிவிலியர்ஸ் 70 ஓட்டங்களுடனும் ரொபின் பீட்டர்சன் 68 ஓட்டங்களுடனும் டுப்லசிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.தனிநபராக இறுதிவரை போராடிய மெக்லாரன் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்க அணியால் 50 ஓவர் முடிவில் 305 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 26 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார், யாதவ்,இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ஆட்ட நாயகனாக தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

~கேசா~