சுவாதி படுகொலைக்கு பின்னர் பெண்களிடையே தற்காப்பு கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிப்பு!!

651

women

மென் பொறியாளர் சுவாதியின் கொலைக்கு பிறகு தற்காப்பு கலை கற்றுக் கொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அதிகரித்து வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வதும் அவசியமாகியுள்ளது.

தற்காப்பு கலை என்றால் கராத்தே, குங்பூ ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அன்றாட வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்னைகளை எளிதாக கையாளும் யுக்திகளை கற்றுக் கொடுக்கும் “க்ரவ் மாகா” போன்ற தற்காப்பு கலை பயிற்சிகளின் பக்கம் ஐடி ஊழியர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

உடல் வலிமையை பெருக்குவதை விட தன்னம்பிக்கையை அதிகரித்து சிக்கலான சூழல்களிலிருந்து சாதுர்யமாக தப்பித்துக் கொள்ள உதவும் தற்காப்பு கலை பயிற்சிகளே அவசியமானது.

பள்ளிக் காலம் முதலே பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் இளம் பெண்களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி பெரும் உதவியாக இருப்பதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது எவ்வளவு அவசியமோ அதே போன்று ஆண் பிள்ளைகளை வளர்க்கும் போது ஆணும் பெண்ணும் சமம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டியதும் மிக அவசியம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

பெண்களுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்திருந்தால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படும் போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் உதவலாம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க, நம் ஒவ்வொரு மனதிலும் பெண்கள் குறித்த பார்வை மாற வேண்டும் என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது.