முட்டாள்தனமான, ஆபத்தான செல்பி எடுப்பதை நிறுத்துங்கள்!!

554

Selfi

குரோஷியா வரும் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்தனமான, ஆபத்தான செல்பி எடுப்பதை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஆண்டு 17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

இயற்கை எழில் கொஞ்சும் தீவுக்கூட்டங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகை தங்கள் செல்போன்களில் பதிவு செய்கின்றனர். அதேசமயம் செல்பி எடுக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. செல்பி மோகத்தில் பாறைகள் மீது நின்றுகொண்டும், நீர்நிலைகளில் ஆபத்தான பகுதிக்கு சென்றும் செல்பி எடுப்பதால் சில நேரங்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது.

எனவே, இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் செல்பிக்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் என மீட்பு சேவைக்குழு அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தி உள்ளனர்.

‘அன்பார்ந்த சுற்றுலாப் பயணிகளே நாங்கள் உங்களை மதிக்கிறோம். உங்களை நீங்கள் மதிக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஆகவே, முட்டாள்தனமான மற்றும் ஆபத்தான செல்பிக்களை எடுப்பதை நிறுத்துங்கள். நன்றி” என மலைப்பகுதிக்கான மீட்பு சேவை அமைப்பு டுவிட் செய்துள்ளது.

பிளிட்வைஸ் ஏரியின் மீது 75 மீட்டர் உயரத்தில் நின்றுகொண்டு செல்பி எடுக்க முயன்ற கனடா இளைஞர் தவறி விழுந்து இறந்ததையடுத்து, மீட்புக் குழு இத்தகைய வேண்டுகோளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.