நடுரோட்டில் வைத்து கணவன், மனைவி, மகனை சரமாரியாக தாக்கிய பொலிஸ் : அதிர்ச்சி வீடியோ!!

741

Police

திருவண்ணாமலையில் பொது இடத்தில் வைத்து தந்தை மகன் ஆகியோரை பொலிசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா (38). இவரது மனைவி உஷா (35), மகன் சூரியா (18).

இவர்கள் மூன்று பேரும் உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க நேற்று மதியம் செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு வந்துள்ளனர்.அப்போது நகையை தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

செங்கம் பிரதான சாலையில் உள்ள பிராதான கடையின் முன்பாக தம்பதியினர் குடும்ப பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்,

அப்போது அங்கு வந்த பொலிசார் பிரச்சனையில் ஈடுபட்ட மூவரையும் எச்சரிக்கை செய்துள்ளனர், இருப்பினும் வாக்குவாதம் தொடர்ந்ததால், ஆத்திரம் அடைந்த பொலிசார் கணவன் மற்றும் மகனை சரமாரியாக அடித்துள்ளனர்

சரியாக விசாரிக்காமலேயே பொது இடத்தில் வைத்து காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செங்கம் நகர மக்கள் கூறும்போது, “குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பொலிசார் மென்மையாக நடந்து கொள்கின்றனர். பாமர மக்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்று காட்டு மிராண்டித்தனமாக தாக்கி அவர்களை அவமதிப்புடன் அவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்துகின் றனர்.

முரட்டுத் தனமாக நடந்து கொண்ட அந்த 3 பொலிசாரில் 2 பேர் சீருடை அணிந்திருந்தனர். மற்றொருவர் (விஜயகுமார்) சாதாரண உடையில் இருந்துள்ளார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பொலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிசார் என்பதால் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடக் கூடாது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி விசாரணை நடத்தி உள்ளார். இதையடுத்து, பொது இடத்தில் கண்மூடித்தனமாக தாக்கிய 3 பொலிசாரும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் ஷாஜித்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.