இலங்கையின் பிரபல நகைச்சுவை நடிகர் மரிக்கார் ராமதாஸ் மரணம் : பிரபலங்கள் அனுதாபம்!!

926

Ramadas

இலங்கையின் புகழ் பெற்ற முன்னணி நகைச்சுவை நடிகரான மரிக்கார் ராமதாஸ், சென்னையில் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு உயிரிழக்கும் போது வயது 69 ஆகும்.

அன்னாரின் மறைவுக்கு இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் கலைத்துறை சார்ந்தவர்கள் அனுதாபங்களை வௌியிட்டுள்ளனர்.

இலங்கை கலை வரலாற்றில் சரித்திரம் படைத்திட்ட ஒரு மாபெரும் கலைஞரான மரிக்கார் ராம்தாஸ் என்று அழைக்கப்படும் ராமதாஸ் அவர்களின் மறைவு இலங்கை கலையுலகிற்கு பாரிய இழப்பாகும் என முன்னாள் பிரதி அமைச்சரும் கலைஞருமான பிரபா கணேசன் தனது இறங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் ஆத்மா நற்பேறு அடைந்திட, நன்றியுடன் பிரார்த்திப்பதாக உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட் தனது முகப்புத்தக பக்கத்தில் அனுதாபம் வௌியிட்டுள்ளார்.

மரிக்கார் ராமதாஸின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருக்கு நிகர் அவரே. அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

உள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.