துருக்கியின் தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். ஹம்சா தெரிவித்துள்ளார்.
துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியின் போது இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்காரா நகரிலிருந்து நியூஸ்பெஸ்டுக்கு அவர் குறிப்பிட்டார்.
துருக்கியின் அதிகாரத்தை தாம் கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டின் இராணுவ குழுவொன்று அறிவித்திருந்தது.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை சமாதான பேரவையின் கீழ் கொண்டுவரவுள்ளதாக அந்த இராணுவ குழு மேலும் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், விடுமுறையில் சென்றிருந்த துருக்கி ஜனாதிபதி டையிப் எர்டோகன் இஸ்தான்புல் நகரைச் சென்றடைந்துள்ளதுடன், இந்த சதிமுயற்சி தேசத்துரோக செயலாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
துருக்கியில் இராணுவ சதிமுயற்சியின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் 40 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பீ.பீ.சீ. உலக செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.






