அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை என்று இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டு மெல்பேர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், முரளிதரன் பந்தை வீசி எறிவதாக குற்றம் சாட்டினார்.
இது முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கைக்கே பெரிய அச்சுறுத்தலாக முடிந்து விட்டது. அப்போது இருந்த அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவ்ர்ட் கூட முரளிதரன் பந்தை வீசி எறிவதாக வெளிப்படையாக விமர்சித்தார்.
இந்த சம்பவம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை எல்லாம் தகர்த்தெறிந்த முரளிதரன் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட சாதனைகளை படைத்தார்.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முரளிதரனை சுழற்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது.
பழைய சம்பவம் பற்றி பேசிய முரளிதரன், எனக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் எந்த பிரச்சனையும் கிடையாது. முன்பு இருந்த வீரர்கள் இப்போதும் கூட எனக்கு நல்ல நண்பர்களாக உள்ளனர்.
ஊடகங்கள் தான் அந்த விடயத்தை வேறுவிதமாக கொண்டு சென்றுவிட்டன. முடிந்தது முடிந்த விடயமாகவே இருக்கட்டும். பழையதை பற்றி பேசிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தை கவனிக்க முடியாது என்று கூறியுள்ளார்.






