ஸ்டூவர்ட் பிராட்டை அழ வைக்க வேண்டும் : ஆஸி. பயிற்சியாளர்!!

412

leman

பிடியெடுப்பு என தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன் லீமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டிங்காமில் கடந்த மாதம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து விரர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டமிழந்தும் நடுவர் விரலை உயர்த்தாததால் வெளியேற மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர் 37 ஓட்டங்களில் இருந்த போது சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் ஓவரில் பந்து அவரது துடுப்பில் உரசியபடி விக்கெட் காப்பாளர் பிராட் ஹேடினிடம் சென்றது. அதை அவர் பிடியெடுக்கதவறினாலும், பந்து விக்கெட் காப்பாளரின் கையுறையை உரசிக் கொண்டு, முதலாவது ஸ்லிப்பில் நின்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கிடம் புகுந்தது. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பை வழங்க மறுத்தார்.

ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. நடுவரின் மோசமான தீர்ப்பையும் ஸ்டூவர்ட் பிராட் நடந்து கொண்ட விதத்தையும் அவுஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் வேறு வழியின்றி தொடர்ந்து விளையாடினர். அதன் பிறகு பிராட் 65 ஓட்டங்களில் தான் ஆட்டம் இழந்தார்.

இந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு வேளை ஸ்டூவர்ட் பிராட் தொடக்கத்திலேயே நடையை கட்டியிருந்தால் அவுஸ்திரேலியா வெற்றி கூட பெற்றிருக்க முடியும். இந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் மீது அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமன் திடீரென சூடான தாக்குதலை தொடுத்திருக்கிறார். அவுஸ்திரேலிய வானொலிக்கு லீமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..

காலம் கடந்தாலும் கூட ஸ்டூவர்ட் பிராட்டின் பிடியை அவுஸ்திரேலிய வீரர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இது ஒரு அப்பட்டமான மோசடி. அவுஸ்திரேலிய மக்களும் இதை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எல்லா பிடியெடுப்புக்களுக்கும் உடனே பெவிலியன் திரும்ப வேண்டும் என்று சொல்லவில்லை.

சிலவற்றில் சந்தேகம் இருக்கும். ஆனால் துடுப்பில் உரசியபடி முதலாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகும் போது வெளியேற மறுப்பதை ஜீரணிக்க முடியாது. அடுத்த ஆஷஸ் தொடர் எங்கள் நாட்டில் கோடை காலத்தில் நடைபெற உள்ளது. அப்போது எங்களது ரசிகர்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் (கிண்டல், கேலி உள்ளிட்டவை மூலம் வெறுப்படைய செய்து) என்று நம்புகிறேன்.

அந்த தொடரின் போது ஸ்டூவர்ட் பிராட் கண்ணீர் வடித்தபடி தான் நாட்டிற்கு திரும்புவார் என்று நம்புகிறேன். பந்து துடுப்பில் உரசி கொண்டு தான் சென்றது என்பது பிராட்டுக்கு நன்கு தெரியும். நடுவர்களின் மோசமான தீர்ப்பு தான், அவரை முட்டாள் போன்று ஆக்கி விட்டது. ஆனால் இப்போது அவர் வெளிப்படையாக கூறி வரும் கருத்துகள் அபத்தமானது. அதனால் தான் அவர் மீது எங்கள் நாட்டு மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. என்று லீமன் கூறினார்.