தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டிப் பதார்த்தமொன்று இரகசியமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்.எஸ்.ஜீ எனப்படும் மொனோசோடியம் க்ளுடாமேட் எனப்படும் உணவு சுவையூட்டியே இவ்வாறு இரகசியமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அஜினோ மோட்டோ என்ற பெயரில் இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி விற்பனை செய்யப்பட்டது.
எனினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால இந்த உணவு சுவையூட்டி இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்திருந்தார்.
இந்த உணவு சுவையூட்டி உடலுக்கு தீங்கானது எனவும் புற்று நோயை ஏற்படுத்தும் எனவும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகளில் பகிரங்கமாக அஜினோ மோட்டோ விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.
சுமார் நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி பயன்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் உணவு வகை தயாரிப்பின் போது இந்த உணவு சுவையூட்டி இன்றியமையாத ஒன்றாக காணப்பட்டது.
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, டெவல் போன்ற பல்வேறு உணவு வகைகளுக்கு அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட இந்த உணவு சுவையூட்டி வேறு வழிகளில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் இரகசியமாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு மூடை சுமார் பத்தாயிரம் ரூபாவிலிருந்து அதற்கும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உணவு சுவையூட்டி பயன்பாட்டை தடை செய்யவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களில் அறிவித்த போதிலும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை என சில இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






