யாழ் பல்கலை மோதல் குறித்து விசாரிக்க மூவரடங்கிய குழு நியமனம்!!

485

jaffna Uni

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இடைநிறுத்தபட்ட கல்விச்செயற்பாடுகள் புதன்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இதனைத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இதன் முதற்கட்டமாக மருத்துவபீடம் மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் மாணவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு விவசாய பீடத்தின் பரீட்சைகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

´கடந்த 16ம் திகதி விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, அனைவரையும் மனவருத்ததிற்கு உட்படுத்தியுள்ளது.

சம்பவம் ஏற்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் நிலமை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தும் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டிருந்து.

இதனையடுத்து உடனடியாக பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் இடம்பெற்றது.

இதில் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் இடம்றொமல் இருக்க தாம் பொறுப்பு நிற்பதாகவும், கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்க முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மாணவ ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு நிலமை சுமுகமாக இருந்தாலும் வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாதுகாப்புடன் நம்பகதன்மையான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது எமது கடப்பாடாகும். எனவே அதற்கான நடவடிக்கையினை நாம் ஆரம்பித்துள்ளோம்´ என தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

´யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 16ம் திகதி விஞ்ஞானபீட தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் யாழில் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் சிங்கள மொழியில் சிறந்த பரீட்சயம் உடையவர்கள். எனவே இந்த விசாரணை என்பது நேர்த்தியாக இடம்பெறும்.

மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
 இனிமேல் இவ்வாறு இடம்பெறாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த முடியும். எனவே மாணவர்கள் எவரும் அச்சம் கொள்ளதேவையில்லை என தெரிவித்துள்ளார்.