கபாலி திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி!!

224

Kabali

ரஜினி நடித்த கபாலி திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால், அந்தப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டுமெனக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜி. தேவராஜன் என்பவர் இது தொடர்பாக ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், வரும் 22ம் திகதி வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படத்திற்கு, திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது என்றும் இது தொடர்பாக தலைமைச் செயலாளர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அனுப்பியதாகவும் ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லெயென்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், அதுவரை கபாலி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது மனுவில் தேவராஜன் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இது தொடர்பான புகார் கடந்த 15ம் திகதி தான் தபாலில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த மனு உரிய அதிகாரிகளிடம் போய்ச் சேர்ந்ததா, இல்லையா என்று தெரிந்துகொள்ளாமலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசமும் அளிக்காமலும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதைத் தெரிந்துகொண்ட பிறகு நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிய நீதிபதி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

ரஜினி, ராதிகா ஆப்தே நடித்திருக்கும் கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஜூலை 22ம் திகதியன்று வெளியாகிறது.