வவுனியா மாகாவித்தியாலயத்தில் மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி!!

582

 
வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் இயந்திரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக இன்று (20.07.2016) கையளிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திரு.மரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண சுகாதார அமைச்சரினால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தொகுதி பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா நகர கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வலயக்கல்விப் பணிமனையில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயங்கராவூரை சேர்ந்த லண்டனில் வதியும் செல்வரத்தினம் பிரபாகரன் அவர்களின் நிதியுதவியுடன் அவரது தந்தையின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பெற்ற இந்த இயந்திரத்தொகுதியில் நாளொன்றுக்கு 2000 லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு லண்டனில் வதியும் செல்வரத்தினம் பிரபாகரன் அவர்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இந்த வடிகட்டிய சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் எதிர்காலத்தில் வவுனியா மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், அமைச்சரின் இவ்வருடத்திற்கான மாகாண நிதியொதுக்கீட்டில் வவுனியா வடக்கில் 02 பாடசாலைகளிலும், செட்டிகுளம் பகுதியில் 03 பாடசாலைகளிலும் இதேமாதிரியான குடிநீர் இயந்திரத்தொகுதிகள் பொருத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

1 IMG_8667 IMG_8671 IMG_8676 IMG_8682