337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு..!!

438

ind

இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். அதே சமயம் தங்கள் வீரர்கள் இரண்டு பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக இரு நாட்டு உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், 337 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு இன்று விடுதலை செய்தது. கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த 329 கைதிகளும், லண்டியில் உள்ள சிறார் சிறையில் இருந்த8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிந்து மாகாண உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலிர் சிறையில் உள்ள ஒரு இந்திய கைதி, இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை உறுதி செய்யாததால் அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்று சிறை சூப்பிரெண்டு ஷுஜா ஹைடர் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் 8 ஏ.சி. பஸ்களில் லாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மறறும் பணத்தை அரசு கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் ஹைடர் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட இந்திய கைதிகளில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள். இவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதியில் மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் தண்டனைக் காலம் முடிந்ததும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.