யாழ். பல்கலை சம்பவம் : அறிக்கை வெளியானதுமே அடுத்தகட்ட நடவடிக்கை!!

643

Jaffna university

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று யாழ். பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

இதன்போதே பிரதமரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்பவம் இடம்பெற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க என்னோடு கதைத்தார்.

இதையடுத்து இது பற்றி நான் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தேன்.

சட்டமும் ஒழுங்கும் அமைச்சு இதுவிடயத்தில் துரிதமாக செயற்பட்டது. அமைச்சர் சுவாமிநாதனையும் அனுப்பிவைத்திருந்தோம்.

குறிப்பாக இந்தச் சம்பவத்தை இனவாதமாக்குவதற்கு பெரும்பாலானோர் முயற்சிக்கவில்லை. சுமுக நிலைமையை ஏற்படுத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. எனினும், ஒருவர் மாத்திரம் சிலரை தூண்டிவிட்டு இனவாதம் பேசுகிறனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையானது அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான கோப்பாய் பொலிஸாரரினாலும் யாழ். பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் செயற்பட்ட மாணவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொர்பில் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் வெளிப்பட்டுள்ள த.சிசிதரன் என்ற மாணவன் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் மூவரடங்கிய குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளின் நிமித்தமான உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உப தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லவுள்ளனர்.

இதன்போது கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களையும் அதேபோல், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தி தற்போதைய நிலைமைகள் பற்றி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படுவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உரிய ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.