ரஜினி நடித்த கபாலி திரைப்படம் இன்று வெளிவருவதை முன்னிட்டு கரூரில் பேக்கரி ஒன்றில் கபாலி கெட்டப்பில் 4 அடி உயர கேக்கை செய்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
கபாலி. எங்கு பார்த்தாலும், யாரை பார்த்தாலும் கபாலி பற்றிய உரையாடல்களே காதில் விழுகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் திரைக்கு வருகிறது. கபாலி வெளியீட்டை ரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள். திரையரங்குகளில் கட்அவுட், பனர்கள் அமைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர்.
இந்நிலையில், கரூரில் தனியார் பேக்கரி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி உருவத்தை 4 அடி உயர கேக்காக செய்து பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த கபாலி கேக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக்கில் கபாலி பட ரஜினி கெட்டப்பில் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 நாட்கள் செலவிட்டு இந்த கேக்கை தயாரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் கூறுகிறார். இந்த கேக் 20,000 ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடையின்முன் வைக்கப்பட்டுள்ள இந்த கேக் வாடிக்கையாளர்களையும், குழந்தைகளையும், ரஜினி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
ஒரு சில ரஜினி ரசிகர்கள் மேலும் ஒரு படி தாண்டி தலையில் கபாலி ஸ்டைலில் தலைமுடியை வெட்டி வலம் வருகின்றனர். இன்னும் என்னனென்ன கெட்டப்பில் கபாலி வலம் வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.










