மீண்டும் விளையாட ஆசைப்படும் அஜய் ஜடேஜா!!

329

ajay-jadejaஅஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர் ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம்.
கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா 2000ம் ஆண்டு வரை விளையாடினார்.

42 வயதான இவர் இதுவரை 15 டெஸ்ட் (576 ஓட்டங்கள்), 196 ஒருநாள் (5359 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு ஐந்து ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அப்பீல் செய்த இவருக்கு, 2003ல் டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தடை நீக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வயது, உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2005ல் ரஞ்சிக் கிண்ணத்துக்கான ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளராக களமிறங்கினார்.

அதன்பின் 2007ல், ஹொங்காங் சர்வதேச சிக்சஸ் தொடரில் விளையாடினார். இந்நிலையில் சமீபத்தில் இவர், சென்னையில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அரியானா அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

இதன்மூலம் ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். இதனையடுத்து இவர் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏழாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அஜய் ஜடேஜா கூறுகையில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணம் கிடையாது. ஏனெனில் T20 போட்டியில் விளையாடுவதற்கேற்ப உடற்தகுதி என்னிடம் இல்லை.

டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் இருந்து T20 போட்டி முற்றிலும் மாறுபட்டது. எனவே ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர விரும்புகிறேன்.

அதேவேளையின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சிக் கிண்ணத் தொடரில் அரியானா அணிக்காக விளையாட விரும்புகிறேன். இத்தொடரில் விளையாடுவதற்குரிய தகுதியும், திறமையும் என்னிடம் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன்.

ஆனால் அணியில் தெரிவு செய்யப்படுவது என் கையில் இல்லை. இது, அரியானா அணி நிர்வாகத்திடம் உள்ளது என்றும் புச்சிபாபு தொடர் மூலம், மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.