பாலியல் வன்முறையை தடுக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்!!

369

abuse

பாலியல் வன்முறைகள் நிகழ்வதை நகர சபை அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம், உடனுக்குடன் தெரியப்படுத்தும் நடைமுறை, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும், காமுகர்களின் வெறியாட்டம் தொடரவே செய்கிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட பொது இடங்களில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கவும் இதுகுறித்த உடனடி தகவல்களை பெறவும், அந்நாட்டை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது.

இந்த அப்ளிகேஷனை பெண்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதின் மூலம் பாலியல் ரீதியான தாக்குதல்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும் என, நியூயார்க் நகர சபை உறுப்பினர் கிறிஸ்டியன் குயின் தெரிவித்தார். இதுகுறித்து, கிறிஸ்டியன் குயின் கூறியதாவது:

இந்த புதிய அப்ளிகேஷனை பயன்படுத்துவதின் மூலம் பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகும் போது, அது பற்றி தகவல்கள், உடனடியாக நியூயார்க் நகர சபை அலுவலகத்திற்கும் மேயர் அலுவலகத்திற்கும் கிடைக்கும்.

எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிக்னல்கள் அங்கு அனுப்பப்படும். இதன் மூலம், நகரின் எந்த பகுதியில் எந்த நேரத்தில், பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார் என்ற விவரமும் உடனடியாக தெரியப்படுத்தப்படும். சரியான இடம், சரியான நேரம் பற்றி தகவல்கள் மேயருக்கு உடனடியாக தெரியப் படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, பாதிப்புக்குள்ளான பெண்ணை மீட்க முடியும் என கிறிஸ்டியன் குயின் தெரிவித்துள்ளார்.