வேகத்தை குறைக்க மாட்டேன்: உமேஷ் யாதவ்!!

354

umesh

காயம் போன்ற எந்த காரணத்துக்காகவும் பந்துவீச்சில் வேகத்தை குறைத்துக் கொள்ளமாட்டேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் (32), 26 ஒருநாள் (29) போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 62 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்குப் பின்பு சிறிய ஓய்வில் இருந்த இவர் சில வாரங்களாக மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார். 25 வயதான உமேஷ் யாதவ் பந்துவீச்சு குறித்து கூறுகையில், மேற்கிந்திய தீவுகளிலிருந்து திரும்பியதும் இரு வாரங்கள் மட்டும் ஓய்வு எடுத்தேன். அடுத்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.

விதர்பா கிரிக்கெட் சங்கத்திலுள்ள உள்ளரங்கில் அதிகமாக பயிற்சியில் ஈடுபடுகிறேன். இது அடுத்து வரும் சம்பியன்ஸ் கிண்ணம், அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கு கை கொடுக்கும்.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்ற முறையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். தொடர்ந்து ஒரே வேகத்துடன் பந்துவீசுவது தான் எனது பலம். தேசிய அணிக்காக விளையாடும் போது இது தான் எப்போதும் எனது நோக்கம்.

ஒருவேளை மூன்று விதமான இந்திய அணிக்கும் தெரிவு செய்யப்பட்டாலும் எந்த காரணத்துக்காகவும் வேகத்தை குறைக்க மாட்டேன். 2011-12ல் அவுஸ்திரேலியா சென்ற போது மெக்ராத்தை சந்தித்தேன்.

அப்போது அவர் வேகம் அல்லது மிக வேகம் என்று எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு நீளம் மற்றும் வேகத்தில் பந்துவீசுவார். ஆனால், எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிந்து செயல்பட்டால் சாதிக்கலாம் என்றார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம். போட்டியின் 40 அல்லது 42வது ஓவர் என்றாலும் இரண்டு பந்து என்பதால், அது 20 ஓவர்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதனால், நன்கு சுவிங் செய்ய உதவும்.

இந்திய அணியில் தற்போதுள்ள இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமாருடன் இணைந்து பந்துவீசுவது மகிழ்ச்சி என்று கூறினார்.