அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகள்கள் : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

411

21

90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘குச் குச் ஹோத்தா ஹை’ என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று தந்தைக்கு திருமணம் செய்து வைப்பார் 8 வயது மகள்.

சினிமாவில் பார்த்து ரசித்துப் பார்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், கேரளாவில் நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லத்தில் வசிக்கும் அனிதா செம்புவில்யால், தனது இளம்வயதில், ஜி.விக்ரம் என்ற தனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் மீது காதல்வயப்பட்டார். ஆற்றங்கரையிலும் கடல்மணல்வெளியிலும் தங்கள் காதலை நாள்தோறும் வளர்த்தனர்.

ஆனால் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்த போது, அப்படி ஒரு எதிர்ப்பை சந்திப்போம் என இருவரும் நினைத்துப்பார்க்கவில்லை. அனிதாவின் காதலுக்கு அவரது பெற்றோரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

துணிந்து ஒருநாள் அனிதாவை பெண் கேட்டு வந்த விக்ரமை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் தன் அதிகாரத்தைக்காட்டி அந்த ஊரைவிட்டே வெளியேறச் செய்தார் அனிதாவின் தந்தை.

நொறுங்கிப்போனார் அனிதா. அனிதாவின் தந்தை அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அனிதாவின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

கொஞ்சகாலம்தான் அந்த வாழ்க்கை இனித்தது. அனிதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒருநாள் எதிர்பாராதவிதமாக இறந்தார்.

அதன்பின் தனது 2 குழந்தைகளுடன் தன் வாழ்க்கையை மீண்டும் துவக்கினார் அனிதா. அனிதாவின் 2 மகள்களும் வளர்ந்து கல்லுாரிக்கு செல்லும் வயதை எட்டினர்.

கணவரின் மறைவுக்கு பிறகு பல சிரமங்களுக்கு இடையே தன் 2 மகள்களையும் வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்துவைத்தார் அனிதா.

இந்த சமயத்தில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் அனிதாவின் வாழ்வில் நிகழ்ந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பணிக்காக சென்ற இடத்தில் தனது பழைய காதலன் ஜி.விக்ரமை சந்திக்க நேர்ந்தது.

அனிதாவின் பிரிவிற்குப்பின் அவரது நினைவாக விக்ரம் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவது தெரிந்து உருகிப்போனார் அனிதா.

ஊர் திரும்பிய பின் தன் வளர்ந்த மகள்களிடம் ஒருநாள் இதை சாதாரணமாக சொல்லி அழுதார்.அனிதா இதை சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கிப்போனார்.

ஆனால் அம்மாவின் சோகக் கதையைக் கேட்ட மகள்களால் துாங்க முடியவில்லை. அவர்களுக்கு அது கண்ணீரை வரவழைத்தது. தீர்மானமாக ஒரு முடிவெடுத்தனர் சகோதரிகள்.

விக்ரமை நேரில் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் பேசி அனுமதி பெற்று அதை தன் தயாரிடமும் தெரிவித்தனர்.

முதலில் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக தன் இரண்டு மகள்களின் ஆசையின்படி , 32 வருடங்கள் கழித்து, அனிதா தன் தனது காதலர் ஜி.விக்ரமை கடந்த வாரம் வியாழனன்று கரம்பிடித்தார்.

தனது தாயாரின் இளம்வயது நிறைவேறாத விருப்பத்தை அவரது இறுதிக்காலத்தில் நிறைவேற்றி வைத்த மகள்களின் செயல் கேரளாவில் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பணி நிமித்தமாக சென்ற இடத்தில் தனது காதலரை சந்தித்த என் அம்மா, தனது வெற்றிபெறாத காதலைப்பற்றி துயரத்துடன் பகிர்ந்துகொண்டார்.

அம்மாவின் நினைவாக விக்ரம் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வது ஆச்சர்யமளித்தது. எனக்கு கண்ணீரை வரவழைத்தது.

இதுபற்றி என் அக்கா மற்றும் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சேர்த்து வைக்க முடிவு செய்தேன். நானே இதற்கான வேலையில் இறங்கினேன். திருமணத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

எனது அம்மாவை நினைத்து வாழ்ந்து வந்த ஜி.விக்ரமுக்கும் என் அம்மாவுக்கும் கடந்த 21ந்தேதி திருமணம் செய்து வைத்தோம்.” என்று தனது முகநூலில் தனது தாயாரின் திருமணம் குறித்து ஆதிரா குறிப்பிட்டிருக்கிறார்.

இதைவிட சுவாரஸ்யம் ஒன்றும் இந்த திருமணத்தில் உண்டு. அதையும் ஆதிரா தனது முகநுால் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் முழு மன நிறைவோடு ஆசியோடும் தாலி எடுத்து கொடுத்தவர் யார் தெரியுமா?… இதே ஜோடியை 32 வருடங்களுக்கு முன்பு பிரித்து வைத்த என் தாத்தா தான்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலை தேடிச் சேர்த்து வைத்திருப்பது, சபாஷ் சொல்லத்தான் வைக்கிறது.

22