அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோக் மீது ஷேன் வோன் புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். ஏற்கனவே ஸ்டீவ் வோக் ஒரு சுயநலமி என்றும் தன்னம்பிக்கை அற்றவர் என்றும் எதிர்மறைச் சிந்தனை உள்ளவர் என்றும் ஷேன் வோன் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பியது நாம் அறிந்ததே.
அவுஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆகும் வீரருக்கு “பேகி கிரீன்” தொப்பி வழங்குவது வழக்கம், மரபு. இதனை ஒவ்வொரு வீரரும் பெருமையாகக் கருதுவர். இதனை அந்த வீரர் ஒருமணி நேரம் தலையில் அணிய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையை ஸ்டீவ் வோக் கட்டாயமாக்கினார் இது மிகவும் பிடிவாதமானது அபத்தமானது என்று ஷேன் வோன் தாக்கியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் வட்டவடிவமான வெள்ளை நிறத் தொப்பிதான் எனக்கு பிடிக்கும் அது மிகவும் சௌரியமாக இருக்கும். அவுஸ்திரேலிய அணிக்காக உற்சாகமாக விளையாடுவதற்கு பச்சைத் தொப்பியெல்லாம் தேவையில்லை என்று நான் அவரிடம் கூறினேன்.
ஆனால் அவர் மிகவும் கண்டிப்பாக பச்சைத் தொப்பியைத்தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். வேறு வழியின்று நான் ஒத்துக் கொண்டேன். ஸ்டீவ் வோக்கின் இந்தப் பிடிவாதம் அபத்தமானது. அற்பத்தனமானது.
ஒரு முறை 2001ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸை பார்க்க அவுஸ்திரேலிய வீரர்கள் சென்றனர். அப்போதும் பச்சை நிறத் தொப்பியை அணியுமாறு வற்புறுத்தினார். அப்போது சில வீரர்கள் பச்சைத் தொப்பியை அணிந்தே வந்தனர் என்றும் பச்சைத் தொப்பியை கட்டாயம் அணிந்தேயாகவேண்டும் என்ற தேவையெல்லாம் இல்லை எனவும் கூறியுள்ளார்.