ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி நிறைவடையும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் ஓர் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரேவும், உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் மோத வாய்ப்புள்ளது. இதனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களாக திகழும் இவர்கள் இருவரில் ஒருவர் அரையிறுதியோடு வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரருடன், சகநாட்டவரான ரஃபேல் நடால் அல்லது 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோரில் ஒருவர் மோதலாம்.
சமீபத்திய போட்டிகளில் ஃபெடரர், ஆரம்ப சுற்றுகளிலேயே தோற்றுள்ளதால், இந்தப் போட்டியில் அவருடைய ஆட்டம் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்படியானாலும், ஃபெடரர், நடால் ஆகியோரில் ஒருவர் காலிறுதியோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் சோம்தேவ் பங்கேற்கிறார்.
மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் ஓர் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸுடன் சீனாவின் லீ நா அல்லது போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோரில் ஒருவர் மோதலாம். மற்றொரு அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவுடன், இத்தாலியின் சாரா எர்ரானி மோத வாய்ப்புள்ளது.
இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.217 கோடியாகும். அதிக பரிசுத் தொகைக் கொண்ட கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுதான்.
ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு 16 கோடியே, 47 லட்சமும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு 2 கோடியே 66 லட்சமும், கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு 95 லட்சமும் பரிசுத் தொகைûயாக கிடைக்கும்.
இதுதவிர முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு போனஸ் தொகையும் கிடைக்கும். இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 37 சதவீதம் அதிகமாகும்.
புதிய சாதனை படைக்க காத்திருக்கும் செரீனா!
நடப்புச் சாம்பியனும், 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் இந்த முறை சம்பியனாகும் பட்சத்தில், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைப்பார்.
அமெரிக்க ஓபனில் சம்பியன் பட்டம் வென்ற முத்த வீராங்கனை என்ற பெருமை அவுஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் வசம் உள்ளது. அவர் 1973ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றபோது 31 வயது 55 நாள்கள் ஆகியிருந்தது. இந்த முறை செரீனா பட்டம் வென்றால், அப்போது அவர் 32 வயதை எட்டுவதற்கு 18 நாள்கள் மட்டுமே இருக்கும்.
இதுதவிர செரீனா இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற 4வது வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்னர் ஸ்டெஃபி கிராப் (1995, 1996), வீனஸ் வில்லியம்ஸ் (2000,2001), கிம் கிளிஸ்டர்ஸ் (2009, 2010) ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாக இரு முறை பட்டம் வென்றுள்ளனர்.
ரஷியாவின் மரியா ஷரபோவா காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், இந்த முறை செரீனாவுக்கு சவால் அளிக்கக்கூடிய ஒரே வீராங்கனை பெலாரஸின் விக்டோரியா அசரென்காதான். அவுஸ்ரேலிய ஓபனில் இரு முறை சம்பியன் பட்டம் வென்றவரான அசரென்கா, சமீபத்தில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் செரீனாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.