ஆஷஸ் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி !!

345

ashes

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.
ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாத அவுஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 492 ஓட்டங்ககளை எடுத்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்களை எடுத்திருந்தது. இயான் பெல் (29), கிறிஸ் வோக்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர். கனமழை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் ரத்தானது.

நேற்று, ஐந்தாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் (25) நிலைக்கவில்லை. இயான் பெல் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். ஸ்டூவர்ட் பிராட் (9), ஆண்டர்சன் (4) ஏமாற்றினர். மாட் பிரையர் (47), சுவான் (34) ஆறுதல் தந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 377 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா சார்பில் பால்க்னர் 4, மிட்சல் ஸ்டார்க் 3, ரேயான் ஹாரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர் (12) ஏமாற்றினார். வாட்சன் (26), பால்க்னர் (22) நிலைக்கவில்லை. ஸ்டீவன் ஸ்மித் (7), ரேயான் ஹாரிஸ் (1) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

தேநீர் இடைவேளைக்குப்பின், அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்களை எடுத்து, 226 ஓட்டங்களால் முன்னிலை வகித்த போது, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. கிளார்க் (28), ஸ்டார்க் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிராட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு குக் (34), ரூட் (11) ஓட்டங்களில் வெளியேறினர். பின் இணைந்த பீட்டர்சன், டிராட் ஜோடி அசத்தியது. பால்க்னர் ஓவரில் டிராட் இரண்டு பவுண்டரி விளாசினார். தன்பங்கிற்கு, ஸ்டார்க் ஓவரில் பீட்டர்சன் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். பொறுப்புணர்ந்து விளையாடிய இருவரும் ஓட்டங்களை உயர்த்தினர். பீட்டர்சன் டெஸ்ட் அரங்கில் 33வது அரை சதம் கடந்தார். டிராட்டும் அரை சதத்தை எட்டினார். இந்த நேரத்தில், வார்னரின் அபாரமான பிடியெடுப்பில் பீட்டர்சன் 62 ஓட்டங்களில் வெளியேறினார்.

டிராட்டும் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இயன் பெல் (17) ரன் அவுட்டானார். இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்களை எடுத்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவானது.

இதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது.