பல்லேகல மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் முதலில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் பல்லேகெல மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் இலங்கை 117 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 203 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் 86 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி குஷால் பெரேராவின் (176 ஓட்டங்கள்) அபார சதத்தால் 353 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் வார்னர் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதைத் தொடர்ந்து வந்த காவாஜ 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸும் (29) நிலைக்கவில்லை.
இந்நிலையில் அணித்தலைவர் ஸ்மித் (26), ஆடம் வோக்ஸ் (9) ஆகியோர் நிதானமாக விளையாடி வந்தனர்.
இதற்கிடையில் அவுஸ்திரேலியா 27 ஓவர்கள் முடிவில் 83 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் 4வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியா வெற்றிக்கு இன்னும் 185 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் உள்ளன.
இன்றய கடைசி நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஆடம் வோக்ஸ் ஆகியோர் நிலைத்து நின்று விட்டால் அவுஸ்திரேலியா வெற்றியை எளிதில் நெருங்கி விடும்.
அதேசமயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் இருவரும் நிலைத்து நின்று விளையாடுவது மிகவும் கடினம்.
மேலும், இந்த டெஸ்டில் முதல் நாளில் இருந்தே ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டு வருகிறது. இன்று காலையிலேயே மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
நாளையும் மழை குறுக்கிட்டால் ஆட்டம் எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.






