தம்பியை பராமரித்ததால் புலமைப் பரீட்சையை தவற விட்ட மாணவி, பரீட்சைக்கு போகாமல் ஒளிந்திருந்த 7 மாணவர்கள்!!

331

exam

தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றாமல் வீடுகளில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் 7 மாணவர்களை பொலிஸார் அழைத்துச் சென்று பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவங்கள் பரீட்சை தினமான நேற்று இடம்பெற்றுளளது என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாணவர்கள் சிலர் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்காத நிலைமை காணப்பட்டது.

இது தொடர்பில் பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் பாதுகாப்புக் கடமைக்கு வந்த பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனைத் தொடர்ந்து கல்குடா பொலிஸார் இப்பகுதி சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் இந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, ஒரு வீட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் தனது தாய் வீட்டில் இல்லாததன் காரணமாக தானே தனது இளைய தம்பியை பாராமரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பொலிஸார் இந்தச் சிறுமியை மாத்திரம் விட்டுவிட்டு ஏனைய 7 மாணவர்களையும் பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.