ரியோ விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 7 வீரர்களும் 2 வீராங்கனைகளும் பங்குபற்றுகின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் மரதன் ஓட்ட வீரர் அநுராத இந்த்ரஜித் குறே, இன்று நடைபெறும் ரியோ ஒலிம்பிக் ஆரம்ப விழா அணிவகுப்பில் தேசிய கோடியை ஏந்தி இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.
இவரை விட சுமேத ரணசிங்க (ஆண்களுக்கான ஈட்டி எறிதல்), நிலூக்கா கீதானி ராஜசேகர (பெண்களுக்கான மரதன்), நிலூக்க கருணாரட்ன (பட்மின்டன்), சுதேஷ் பீரிஸ் (ஆண்களுக்கான பளுதூக்கல்), மங்கள சமரக்கோன் (ஆண்களுக்கான குறிபார்த்து சுடுதல்), மெத்யூ அபேசிங்க (ஆண்களுக்கான நீச்சல்), கிமிக்கோ ரஹீம் (பெண்களுக்கான நீச்சல்), சமார தர்மவர்தன (ஜூடோ) ஆகியோரும் இலங்கை சார்பாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தத்தமது அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை சார்பாக முதலாவது போட்டியில் பங்குபற்ற இருப்பவர் கிமிக்கோ ரஹீம் ஆவார். இவர் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டிக்கான முதலாம் சுற்றில் பங்குபற்றவுள்ளார்.
இலங்கை குழுவின் தலைமை அதிகாரியாக தேசிய ஒலிம்பிக் குழுவின் பொருளாளர் காமினி ஜயசிங்க செயற்படுகின்றார். உதவி தலைமை அதிகாரியாக தேசிய ஒலிம்பிக் குழுவின் சிரேஷ்ட உதவித் தலைவர் தேவா ஹென்றி நியமிக்கப்பட்டுள்ளார்.






