இன்று பலருக்குள்ள பிரச்சினை தான் உடல் எடை அதிகரித்து காணப்படுவது. பொதுவாக பலருக்கு கீழே குனிந்து சில வேலைகளை செய்வது கூட கடினமாக இருக்கும்.
சிலர் வேலைகளை செய்து முடிப்பதற்குள் களைப்படைந்து விடுவார்கள். எனவே, உங்கள் எடையை குறைக்க அன்றாடம் சில வரைமுறைகளை கடைபிடித்தீர்களானால் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு சில குறிப்புகள்.
♦ உடல் எடையைக் கட்டுக்குள் வைத்து கொள்ள ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
♦ தற்போதைய உங்கள் எடையை ஒரு குறிப்பேட்டில் குறித்து வையுங்கள்.
♦ உங்கள் உணவுப் பட்டியலையும் அந்த குறிப்பேட்டில் குறித்துக் கொள் ளுங்கள்.
♦ எடையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.
♦ உங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.
♦ உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்.
♦ உடல் எடையைக் குறைக்க கண்ட மாத்திரை, மருந்துகளை உண்ணக் கூடாது.
♦ உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் சிற்சில மாற்றங்களைக் கொண்டுவந்தாலே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
♦ உங்களைப் போலவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவரின் நட்பைப் பேணுங்கள், முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்கு பெறச் செய்யுங்கள்.
♦ முயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தாரகமந்திரத்தை மனதில் கொள்ளு ங்கள்.
♦ முட்டைக்கோஸ், குடமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.
♦ தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்பது, செல்பேசியில் பேசிக் கொண்டே உண்பது, புத்தகங்கள் வாசித்துக் கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள்.
♦ உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள், ஐஸ்கிரீம், நெய், சீஸ், வெண்ணெய்,சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.
♦ சிறிய தட்டில் உணவை உண்ணுங்கள். (உளவியல் ரீதியாகப் பெரிய தட்டில் உண்டால் அதிகம் சாப்பிட வாய்ப்பிருக்கிறது)
♦ மூன்று வேளை அதிகம் உண்பதற்குப் பதில் ஐந்து வேளை குறைவாக உண்ணுங்கள்.
♦ அதிகமாகத் தண்ணீர் அருந்துங்கள்.
♦ காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது, அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
♦ இரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும், கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும்.
♦ உணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங்கள்.
♦ இரவு உணவை நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள்.
♦ விரதம் என்றோ,நேரமின்மை காரணமாகவோ எந்த வேளை உணவையும் தவிர்க்காதீர்கள். ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் அடுத்த வேளை உணவை அதிகம் சாப்பிட நேரிடும்.
♦ உங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.
♦ மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களைச் சேர்க்காமல் முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
♦ உணவு உண்டபின் குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும்.(பசிப்பது போல் உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப் பொருட்கள் ஜீரணமாகி விட்டது என்று பொருள், எடை கூடாது)
♦அரிசி உணவுகளும் கிழங்கு உணவுகளும் கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை,ஓட்ஸ், பாஸ்தா, ராகி, கம்பு, தினைவகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
♦ காப்பி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக் கூடாது. கபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் கிறீன் டீ, லெமன் டீ, பழச்சாறுகளை அருந்தலாம்.
♦ உணவில் பச்சைக்காய்கறி, சாலட்கள், பழசாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்களைச் சர்க்கரையிட்டு ஜுஸாகக் குடிப்பதற்குப் பதில் பழங்களாகவே உண்பது உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் உடலிற்குச் சத்தினைச் சேர்க்கும்.
♦ பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.
♦ உடல் எடை மெலிய பட்டினி இருக்காதீர்கள்.சமச்சீரான சரி விகித உணவை உண்ணுங்கள்.
♦ இஞ்சிச்சாறு, இஞ்சிரசம் என்று உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
♦ சமையல் செய்ய நொன்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள், குறைந்த எண்ணெய் செலவாகும்.
♦ மன அழுத்தத்தை அண்ட விடாதீர்கள், அழுத்தத்தில் இருப்போர் அதிகம் உண்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
♦ பசிக்கும் போதெல்லாம் நொறுக்குத் தீனிகளை உண்ணாமல் ஆரோக்கிய மான உணவு, பழங்களைச் உண்ணுங்கள். காய்கறிகள் செலட், ஓட்ஸ் , பழக்கலவைகள் போன்றவை உண்பது பலனளிக்கும்.
♦ உடல் எடையைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸ், கொள்ளுப்பருப்பு ஆகியன முதன்மை வகிக்கின்றன, ஓட்ஸிலும் கொள்ளுப்பருப்பிலும் விதவிதமான பதார்த்தங்களைச் செய்து உடல் எடையைச் சீராக வையுங்கள்.
♦ கண்டதையும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதை விட குறைந்த கலோரி உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
♦ சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவும். இது அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க உதவும்.
♦ இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
♦ கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
♦ உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
♦ பப்பாளிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளிக்காயைக் கூட்டு, சாம்பார் செய்தும் சாப்பிடலாம்.
♦ பசிக்காமல் உண்பதும் ருசிக்காக அதிகமாக உண்பதும் தவறு. உங்களுக்குப் பிடித்த உணவு என்பதற்காக அதிக அளவில் உண்ண வேண்டாம். இதுவே உடலைக் குண்டாக்கும். நாவைக் கட்டுப்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.