
ரயிலில் பயணித்த போது, கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவ்வாறு பலியானவர் வட மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் கே.எல்.புஸ்பகுமார எனத் தெரியவந்துள்ளது.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 49 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த 3ம் திகதி பணி நிமித்தம், கொழும்புக்கு வந்த அவர், அதனை நிறைவு செய்ததும், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில், அனுராதபுரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து, வௌியில் இருந்து சிலர் வீசிய கற்களால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் ஜன்னல் அருகே இருந்த அவரது தலையில் கடும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட புஸ்பகுமார, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஐந்து தினங்களான சுயநினைவின்றி இருந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக மரணமடைந்தார்.





