டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலை அணியை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது : மத்யூஸ்!!

441

CRICKET-SRI-AUS

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக விளங்கும் அவுஸ்திரேலியாவை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான வோர்ன் முரளி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வென்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் இலங்கை அணி தனதாக்கியுள்ளது.

பல்லேகலையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் வென்றதன் மூலம், 1999 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியை இலங்கை அணி முதல் தடவையாக சுவைத்தது.

காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்றதன் மூலம் 17 வருடங்களின் பின் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்துள்ளது.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களைப் பெற, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுடன் சுருண்டது. இலங்கை வீரர் ரங்கன ஹேரத் இப்போட்டியில் ஹெட்றிக் விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நுவன் சொய்ஸாவுக்கு அடுத்தாக ஹெட்றிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் ரங்கன ஹேரத் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதல் இன்னிங்ஸில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேவேளை டில்ருவன் பெரேரா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 237 ஓட்டங்களைப் பெற்றது. தில்ருவன் பெரேரா 64 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்யூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு மேலும் 481 ஓட்டங்கள் தேவையான நிலையில் போட்டியின் 3 ஆவது அவ்வணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆனால், 183 ஓட்டங்களுடன் அவ்வணி சுருண்டது.

முதல் இலங்கையர்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ரங்கன ஹேரத் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4 ஆவது தடவையாக 5 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்களை வீழ்த்தினார் டில்ருவன் பெரேரா. இப்போட்டியில் மொத்தமாக 99 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை வீழ்திய டில்ருவன் பெரேரா, ஒரு டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அரைச் சதம் குவித்ததுடன் பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் பெற்ற முதல் இலங்கையரானார்.

டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் 25 தடவைகள் மாத்திரமே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் டில்ருவன் பெரேரா தெரிவானார்.

இப்போட்டில் வென்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த போட்டி முழுவதும் எனது அணியினர் எனக்கு பின்புலமாக நின்றனர். அவர்களுக்கு எனது விசேட நன்றி.

அதேபோன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தேர்வாளர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி. தரவரிசையில் முதல் நிலையிலுள்ள அணியை வென்றமை மிகுந்த திருப்தியளிக்கிறது. எமக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம்’ எனக் கூறினார்.