உலகின் மிக அதிவேக ரயில் : அடுத்த மாதம் களமிறக்குகிறது சீனா!!

777

Train

மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ – ஷூஜூ இடையே இயக்கப்படும்.

அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன.

புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது.

புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக, 16,000 கி.மீ. தொலைவுக்கு மிக அதிவேக ரயில்களை இயக்கக் கூடிய இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சீனா, கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டொலர் இலாபம் ஈட்டியது என்று அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலீட்டுடன் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், வசதியான பயணம் செய்யவும் சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

சீனா குறிப்பாக இந்தியா உட்பட வெளிநாடுகளில் அதன் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.