16 ஆண்டுகால உண்ணா விரதத்தை முடிக்கும் இரும்புப் பெண்!!

593

Rom-Sharmila

மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா, 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை இன்று முடிக்கிறார்.

மணிப்பூரில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் 2000-ம் ஆண்டு பொலிஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் பலர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்ற சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது. அந்த சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்வதற்கு பாதுகாப்பு படைக்கு அதிகாரம் தருகிறது. அதை எதிர்த்து முறையிடவும் முடியாது.

இதனால் அந்த கொடிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அப்போது (2000-ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி) மனித உரிமை காவலரான இரோம் சானு சர்மிளா (வயது 44), உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் எந்த உணவையும் சாப்பிட மறுத்து வருகிறார். எந்த பானத்தையும் குடிக்கவும் மறுத்து வருகிறார்.

அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பல முறை கைது செய்யப்பட்டும், விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார்.தற்போது அவர் அங்குள்ள ஜவகர்லால் நேரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கில் ஒரு டியூப்பை செருகி அதன் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி இரோம் சர்மிளா இம்பால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் எனது உண்ணாவிரதத்தை ஆகஸ்டு மாதம் 9-ந் திகதி முடித்துக்கொள்கிறேன். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என கூறினார். அதன்படி தனது 16 ஆண்டு கால உண்ணா விரத போராட்டத்தை நாளை இரோம் சர்மிளா முடித்துக்கொள்கிறார்.

இரோம் சர்மிளாவின் சகோதரர் இரோம் சின்காஜித் பிடிஐ செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில்,”நாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் இரோம் சர்மிளா ஆஜர்படுத்தப்படுகிறார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் உள்ள அவரை நாளை கோர்ட்டு விடுவிக்க இருக்கிறது.

இதன்பின்னர் 15 தினங்களுக்கு முன் அறிவித்தபடி தனது உண்ணா விரத போராட்டத்தை நாளை முறைப்படி கைவிடுவார். விடுதலைக்கு பிறகு அவர் எங்கு செல்வார் என்று தெரியவில்லை. அவர் ஒருவேளை வீட்டிற்கு வந்து தங்க விரும்பினால், நாங்கள் அவரை வரவேற்க ஆர்வமாக உள்ளோம்.ஆனால், இது அவரின் விருப்பத்தை பொறுத்தது” என்றார்.