சிங்கங்களுடன் செல்பி எடுத்ததற்காக 20,000 அபராதம் செலுத்திய ரவீந்திர ஜடேஜா!!

647

Selfi

குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் உள்ள பகுதியில் இறங்கி படமெடுத்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஜூனாகாத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கிர் வனவிலங்கு சரணாலயம். வனவிலங்குகள் உள்ள பகுதிக்கு ஜீப் மூலம் பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுவது வழக்கம். சிங்கம் உள்ள பகுதிக்கே ஜீப்பில் அழைத்து செல்லப்படுவதால் பார்வையாளர்கள் இப்பகுதிக்கு செல்ல அதிகம் அலைமோதுவது வழக்கம்.

வனவிலங்குகள் உள்ள பகுதிக்கு அருகே அழைத்து சென்று பார்வையாளர்களை காட்டும் போதிலும், ஜீப்பில் இருந்து இறங்குவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவது இல்லை.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ரவீந்திர ஜடேஜா அத்துமீறி ஓடும் ஜீப்பில் இருந்து இறங்கி சிங்கங்கள் முன்பாக படமெடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வெளியான நிலையில், வனவிலங்கு சரணாலயம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் வனவிலங்கு சரணாலயத்திற்கு வந்திருந்த ஜடேஜா விதிகளை மீறி ஜீப்பில் இருந்து இறங்கி படம் எடுத்ததால் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜடேஜாவுடன் நின்றிருந்த அவரது மனைவிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாவும், முழு விசாரணை அறிக்கை வந்தவுடன் ஜடேஜா தம்பதியுடன் இருந்த வன அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரணாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.