வவுனியாவில் கடத்திக் கொலை செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை!!

1059

Vavuniya-Court

வவுனியாவில் ஒருவரைக் கடத்தி கொலை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் லெட்சுமணன் குலராசா என்பவரை கடத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஆறுமுகம் சசிகுமார், காளிமுத்து சுரேஸ் ஆகிய இருவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டு சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பாக நிஷாந்த நாகரட்ணம் வழக்குத் தொடுநர் தரப்பில் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார். வழக்கு விளக்கம் இடம்பெற்று வழக்கின் இரண்டாம் எதிரியான காளிமுத்து சுரேஸ் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு சாட்சிகள் இல்லாத காரணத்தினால் இவ் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

முதலாம் எதிரியான ஆறுமுகம் சசிகுமார், லெட்சுமணன் குலராசா என்பவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாக காணப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடத்திய குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறுமுகம் சசிகுமார் கொலை செய்யப்பட்டவர் கடுமையான சித்திரவதைக்குட்பட்டுத்தப்பட்டார் என்று சட்டவைத்திய அதிகாரி மன்றிற்குத் தெரியப்படுத்தியதையடுத்து 20 வருடகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.