நுளம்புக் கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்!!

582

health_news_for_online_9_8_16

இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த விரட்டிகளைத் தான் நிவாரணத்திற்காக பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் நுளம்பை வரவிடாமல் தடுப்பதற்கும், அதையும் கடந்து, வீட்டிற்குள் நுழைந்து, படுக்கையறைக்குள்ளும் வந்துவிட்டால் அதன் கடியிலிருந்து தப்பிப்பதற்கும் இரசாயனம் கலக்காத இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்படும் விரட்டிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே.. இதைத்தான் தற்போது விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் தற்போது கிடைக்கும் நுளம்பு விரட்டுவதற்கான மருந்துகள் எல்லாம் பக்கவிளைவுகள் கொண்டவை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

நுளம்புவை வீட்டிற்குள் வரும்போது, அதன் பாதைகளிலோ அல்லது அவை தங்குமிடங்களிலோ சர்க்கரையையும் ஈஸ்ட்டையும் கலந்த கலவையை வைத்துவிட்டால் போதும். அவை வராது. வந்தாலும் கடிக்காது. அதே போல் எலுமிச்சையும் யூகலிப்டஸ் தைலமும் கலந்த கலவையையும் பயன்படுத்தலாம். மலேரியாவை பரப்பும் நுளம்புகளை 30 சதவீதம் இத்தைலம் உறுதியாக தடுக்கிறது என்று ஆய்வாளர்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் என்பவற்றை வாங்கி வீட்டில் தண்ணீரிலோ அல்லது ஏதேனும் முக்கியமான இடத்திலோ வைத்துவிட்டால் நுளம்பு வீட்டிற்குள் எட்டிப்பார்க்காது. அதேபோல் ஒரு சிலருக்கு தங்களின் உடலில் கிராம்பு எண்ணெயைத் தடவிக் கொண்டால் அவர்களை நுளம்பு ஒருபோதும் கடிக்காது.

ஒரு சிலர் பயணங்களின் போதோ அல்லது அவர்களது சொந்த மண்ணிற்கு பயணம் மேற்கொண்டு அங்கு தங்கியிருக்கும் போதோ நுளம்புகளின் தொல்லை தாங்க இயலவில்லை என்றால், மேற்கூறியவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்து கலந்த கலவையோ உடன் வைத்துக் கொண்டால் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்கலாம். நோயிலிருந்தும் தற்காத்துக கொள்ளலாம் இயற்கையான முறையில். இந்த கலவை எப்படி தயாரிக்கவேண்டும் என்பதை அருகிலுள்ள மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து பயன்பெறவும்.

நுளம்பு கடித்து தோல் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் தயவு செய்து மருத்துவர்களை சந்திக்கவும். அவர்கள் உங்கள் தோலை பரிசோதித்து தற்போது சந்தையிலுள்ள அதிக பக்கவிளைவுகளற்ற மூன்று விதமான நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள். அவற்றை பயன்படுத்தி இதிலிருந்து குணமடையலாம்.