இன்று..

706

வாழ்வின் இறுதி
அத்தியாயங்களில் -உயிருடன்
ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம்
ஈழத்து உறவுகளை -இன்னும்
என்ன செய்ய போகின்றாய்?

உண்மைகள் மறைக்கப்படும்
இரவுகள் தொடர்ந்து கொண்டே
விடிகின்றது எம் முற்றம்..

எங்கோ மண் பிறாண்டி
துடிப்படங்கும்-நாயின் ஓலமும்
இரும்புச் சப்பாத்துகளின்
இரக்கமற்ற உதைப்புகளும்
சொல்லித் தருகின்றன
எம் மீதான பார்வைகளை..

எதை எதையோ
எழுத நினைத்த-என்
கரங்கள் அடங்கிப்போயிற்று
ஒரு துளி மையினுள்..

முடிந்த நாட்களில்
மண்டையோடுகளில்
கூழ் குடித்த பேய்களின்
பயமுறுத்தல்கள்..

சிறைச்சாலைகளில்- இன்னும்
காயாத இரத்தக் கறைகள் -இப்போதும்
வலியை- தரும் தழும்புகள்..

காணமல் போன
அன்னையா்களின் ஒப்பாரிகள்
அனாதை குழந்தைகளின்
கெஞ்சுதல்கள்..

பீரங்கி வாயினில்
கூண்டினை கட்டி
குடிபுகுந்துள்ள நிஜத்தினை -சொல்லி நிற்க..

இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்
எழுதாத என்- வரிகளை
மறைத்துக் கொள்கின்றேன்
மன்னித்து விடுங்கள்
ஜ.நா அதிகாரிகளே-இன்றும்
நாமும் ஒா் கைதி
இன்னும் விடியவில்லை எம் முற்றம்..

நட்சத்திரங்களை விழுங்கிய
வானத்தின் கடவாய்களில்
இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கின்றது
உங்கள் கால்களைப் பாருங்கள்..

ஜ.நா அதிகாரிகளே
எங்கள் குருதிகளால்
உங்கள் பாதங்கள் நனைய வேண்டுமா?
துவாயில் உள்ளவர்களின் -பின்னால்
நாமும் உள்ளோம் -எங்கள்
இரத்தங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்..

இனியும் வேண்டாம்
இந்த அவலம் -எங்கள்
கற்பப்பைகள்-எல்லாம் தற்கொலை
செய்து கொள்ளட்டும்..

-மித்யா -கானவி-