இளைஞர் ஒருவர் குப்பைத் தொட்டி யொன்றுக்குள் உறங்கியபோது, குப்பை களுடன் சேர்த்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஓர்கன் மாநிலத்தின் அல்பெனி நகரைச் சேர்ந்த 23 வயதான ஐவன் ரொசாலியோ மெண்டிஸ் பெரெஸ் எனும் மேற்படி இளைஞர் வீதியோரத்திலிருந்த குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
அப்போது, குப்பை ஏற்றிச்செல்லும் வாகனமொன்றுக்குள் குப்பைகளுடன் சேர்த்து மேற்படி இளைஞரும் கொட்டப்பட்டார். அக் குப்பைகளை அரைத்து மீள்சுழற்சிக்குட்படுத்தப்படவிருந்த வேளையில், விழித்தெழுந்த அவர், தனது நிலையை உணர்ந்து திடுக்கிட்டார்.
உரத்த சத்தம் எழுப்பி சாரதியின் கவனத்தை ஈர்க்க அவர் முயன்றார். எனி னும், சாரதிக்கு அவரின் குரல் கேட்கவில்லை. அதையடுத்து குப்பை வண்டியிலிருந்த கார்ட்போட்களை வெளியே வீசி எறிந்தார் ஐவன்.
அதை அவதானித்த குப்பை வண்டியின் சாரதி, அவ் வாகனத்தின் பின்புறம் சென்றபோது ஒருவர் உள்ளே இருப்பதை உணர்ந்து அவசர சேவைப் பிரிவு க்கு தகவல் கொடுத்தார். அதன்பின் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் குப்பை வண்டியிலிருந்து ஐவன் மீட்கப்பட்டார்.
அவர் பல தடவைகள் குப்பைகளுடன் சேர்த்து அழுத்தப்பட்டிருந்ததாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐவனின் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.






