அமெரிக்காவில் வசிக்கும் ஜேர்மனிய இளைஞர் ஒருவர் கலிபோர்னியா மாநிலத்தில் பல்வேறு வாகனங்கள், வீடுகளை தீக்கிரையாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தனது தாயாரை அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் நாடு கடத்தியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக தீ வைக்கும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
29 வயதான ஹரி பர்க்ஹார்ட் எனும் இந்த இளைஞர் 2011 டிமெசம்பர் 30 ஆம் திகதிக்கும் 2012 ஜனவரி 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் கலிபோர்னியாவின் சான் பெர்னாண்டோ, மேற்கு ஹொலிவூட் பகுதிகளில் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தனது தாயார் டொரத்தி பர்க்ஹார்ட்டை அதிகாரிகள் நாடு கடத்தியதால், அமெரிக்காவை தீயில் வாட்டியெடுக்கப் போவதாக இவர் அச்சுறுத்தினார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வாகனங்களுக்கு வைத்த தீ பல வீடுகளுக்கும் பரவியது. இச் சம்பவங்களில் எவரும் காயமடையாத போதிலும் சொத்துகளுக்கு 30 இலட்சம் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







