முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி!!

453

Australia's captain Steve Smith, second right, congratulates Mitchell Starc, right, after defeating Sri Lanka by three wickets during their first one day international cricket match in Colombo, Sri Lanka, Sunday, Aug. 21, 2016. (AP Photo/Eranga Jayawardena)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் குஷல் பெரேரா ஒரு ஓட்டத்துடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் நிதான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.

மறுபுறம் டில்ஷான் 22 ஓட்டங்களைப் பெற்றவேளை, ஆட்டமிழக்க, மைதானம் நோக்கி வந்த தினேஷ் சந்திமால் அதிரடியாக ஆடி 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தார்.

எனினும் மென்டிஸ் 67 ஓட்டங்களுடன் வௌியேறியதும் பின்னர் வந்த வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 227 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தது இலங்கை.

இதன்படி 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு, டேவிட் வோனர் கைகொடுக்க தவறினார்.

அவர் 8 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் வௌியேற, அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித், மற்றுமொரு ஆரம்ப வீரரான பின்ஜ்சுடன் (Aaron Finch) இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

முடிவில் அந்த அணி 46.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று, 19 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களால் வெற்று வாகை சூடியது.

அவுஸ்திரேலியா சார்பாக பின்ஜ் 56 ஓட்டங்களையும், ஸ்மித் 58 ஓட்டங்களையும் விளாசினர்.